டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலை காலிறுதியில் வீழ்த்திய இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அரையிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் 19 வயதே ஆன இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸின் அதிரடி வெற்றிகள் தொடர்கிறது. இத்தொடரின் அரையிறுதி போட்டியில் அவர் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச்சை 3 மணி நேரம் 35 நிமிடங்கள் கடுமையாக போராடி தோற்கடித்தார். முன்னதாக காலிறுதியில் இவர் மற்றொரு ஸ்பெயின் வீரரான டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் ஒரே தொடரில் ஜோகோவிச் மற்றும் நடாலை தோற்கடித்த முதல் வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றுள்ளார்.
அல்காரஸ் தொடர்ச்சியாக 6 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் இவை அனைத்துமே உலகின் டாப் 10 வீரர்களை தோற்கடித்து பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாட்ரிட் ஓபனில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக 2005 ஆம் ஆண்டில் மாட்ரிட் ஓபனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இளம் வீரராக ரபேல் நடால் செய்த சாதனையை 19 வயதான அல்காரஸ் முறியடித்தார்.