விளையாட்டு

“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி

“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி

rajakannan

கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள எப்பொழுதும் தயாராக உள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 7வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். 

கோப்பையை வென்ற பின்னர் தன்னுடைய கேப்டன்ஷிப் குறித்து ரோகித் கூறுகையில், “தோனி கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திய ஆண்டுகளில் அவரிடம் நாங்கள் பார்த்து வந்தது என்னவென்றால், அவர் ஒருபோதும் பயப்படமாட்டார், முடிவு எடுப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வார். எனக்குள் அதுபோன்ற தன்மைகள் உள்ளது. நானும் முதலில் யோசிப்பேன், பின்னர் முடிவு எடுப்பேன். 

ஆமாம், 50 ஓவர் போட்டிகளில் நேரம் இருப்பதால், சரியாக பயன்படுத்த வேண்டும். அவரது கேப்டன்ஷிப்பில் விளையாடிய நாட்களில் இதனை நாங்கள் கற்றுக் கொண்டோம். எப்பொழுதெல்லாம் சிக்கல் வருகிறதோ, ஆலோசனை கொடுக்க தயாராக இருப்பார்.

தோனியிடம் கற்றுக் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். ஏனெனில், அந்த அளவிற்கு அவர் சிறந்த கேப்டன். பீல்டிங்கில் கேள்வி, சந்தேகம் எழும்பொழுது, வழிகாட்ட அவர் தயாராகவே இருப்பார்” என்றார். 

மேலும், கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதனை ஏற்று செயல்படவும் தயாராக இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னதாக இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரை வென்றது.

“ரோகித்தின் கேப்டன்ஷிப்பில் ஒரு அமைதியான போக்கு தெரிகிறது. வங்கதேச அணி அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய போதும் அவர் பொறுமையாக தான் இருந்தார். தன்னுடைய கேப்டன்ஷிப் முழுவதும் அவர் கூலாகவே செயல்பட்டார்” என்கிறார் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

ஆசியக் கோப்பை தொடரில் தன்னுடைய பேட்டிங் திறனால் தோனி பெரிதாக ஜொலிக்கவில்லை. இருப்பினும், தன்னுடைய அசாத்திய விக்கெட் கீப்பிங் பணியாலும், களத்தில் அவர் வழங்கிய ஆலோசனைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.