விளையாட்டு

நியூசிலாந்து "டெயில் என்டர்ஸ்"களை சமாளிப்பார்களா இந்திய பவுலர்கள் ?

நியூசிலாந்து "டெயில் என்டர்ஸ்"களை சமாளிப்பார்களா இந்திய பவுலர்கள் ?

jagadeesh

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை அதிகாலை தொடங்கவுள்ள நிலையில், எதிர் அணியின் கடைநிலை பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட்டில், நம்பர் ஒன் அணியான இந்தியாவின் நீண்ட நாள் பிரச்னையான இது குறித்து விரிவாகக் காணலாம்.

செஸ் விளையாட்டில் சிப்பாய்களைக் கொண்டு தற்காத்துக் கொள்ள முடியுமென்பது ஒருமுறை என்றால், அவற்றை நகர்த்தி எதிர் எல்லையை அடைந்து ராணியாக மாற்றுவது மற்றொருமுறை. சிப்பாய்களை போலதான் கிரிக்கெட்டில் TAIL ENDERS என்று அழைக்கப்படும் கடை நிலை பேட்ஸ்மேன்களைச் சொல்லலாம். அவர்கள் NIGHT WATCHMEN ஆக இருந்து விக்கெட்டுகளை காப்பாற்றிய காலம் போய், ரன்களைக் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றும் நாயகர்களாக உருவெடுத்துள்ளனர்.

இழப்பதற்கு எதுவும் இல்லை, இயன்றவரை ரன்களை குவிக்கலாம் என்பதுதான் கடைநிலை பேட்ஸ்மேன்களின் தாரக மந்திரம். இவர்களின் திட்டங்களில் தொடர்ந்து அகப்படும் அணியாக இருந்து வருகிறது இந்தியா. டெஸ்ட்டில், கடந்த 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 8ஆவது ஆட்டக்காரர் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணி, சராசரியாக 101 பந்துகளை எடுத்துக் கொள்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து அணி சராசரியாக 92 பந்துகளை வீசி கடைசி 4 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்துகிறது. எதிரணி கடைநிலை பேட்ஸ்மேன்களின் சாதுர்யமான ஆட்டத்தால் பல போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இளம் வீரர் சாம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் கடைசிநேர நிலையான ஆட்டத்தால் மூன்று டெஸ்டுகளில் இந்தியா தோல்வி அடைந்தது. பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா உடனான தொடரிலும், இந்திய அணி கடைநிலை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய திணறியது. அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பந்துவீச்சாளர்கள் கைல் ஜேமிசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை தடுத்தனர்.

இந்தப் போட்டியில், 8 ஆவது வீரராக களமிறங்கிய ஜேமிசன் 44 ரன்களும், 11ஆவது வீரராக களம் கண்ட போல்ட் 38 ரன்களும் சேர்த்து வியக்க வைத்தனர். இந்தியாவுக்கு எதிராக கடைநிலை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு, பந்துவீச்சாளர்களின் மெத்தனப்போக்கும், அலட்சியமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், எத்தகைய சாவல்களையும் முறியடித்து வெற்றியை வசப்படுத்தும் திறன் இருப்பதால்‌தான் இந்தியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. எதிரணியின் கடைநிலை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவிக்கும் இப்பிரச்னைக்கு இந்தியா விரைவில் தீர்வு காணும் என நம்பலாம்.