கேமரூன் க்ரீன் pt web
விளையாட்டு

“சிறுவயதில் இருந்தே நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு” - ஆஸி. வீரர் கேமரூன் க்ரீனின் சோகமான மறுபக்கம்!

சிறுவயதில் இருந்தே நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கேம்ரூன் க்ரீன் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் அறிமுகமானார்.

இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1075 ரன்களை எடுத்துள்ளார். 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 20 இன்னிங்ஸ்களில் 442 ரன்களை எடுத்துள்ளார். 8 டி20 போட்டிகளில் 139 ரன்களையும் 16 ஐபிஎல் போட்டிகளில் 452 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 5 விக்கெட்களையும், ஐபிஎல் போட்டிகளில் 6 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இதற்கு முன்பாக இவர் மும்பை அணிக்காக விளையாடினார். இந்நிலையில் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்நாள் முழுவதும் போராடி வருகிறேன் என கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.

சேனல் 7 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “நான் பிறக்கும் போது எனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்ததாக என் பெற்றோர் கூறியுள்ளனர். எந்த அறிகுறிகளும் இல்லை. அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. நாள்பட்ட சிறுநீரக நோயுள்ளவர்களின் சிறுநீரகங்கள் மற்ற சிறுநீரகங்களை போல் ரத்தத்தினை சுத்திகரிக்காது. தற்போது 60% அளவில் செயல்படுகின்றன. இது இரண்டாது நிலை.

நான் சிறுவனாக இருந்த போது மிகவும் சிறியவனாக இருந்ததாக என் பெற்றோர் என்னிடம் சொல்லியுள்ளனர். இப்போது அதை திரும்பப் பார்க்கும் போது நகைச்சுவையாக உள்ளது. நான் என்னை அதிர்ஷ்டமுள்ளவனாக நினைத்துக் கொள்வேன். நாள்பட்ட சிறுநீரக நோயுள்ள மற்றவர்களைப் போல் நான் உடல்ரீதியாக பாதிக்கப்படவில்லை.

நாள்பட்ட சிறுநீரக நோய் 5 நிலைகளைக் கொண்டது. முதல் நிலை குறைந்த அளவு பாதிப்புகளைக் கொண்டது. ஐந்தாவது நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலைசிஸ் செய்ய வேண்டும். நான் இரண்டாம் நிலையில் உள்ளேன்.

எனக்கு ஞாபகம் உள்ளது. நான் வளரும் போது ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவேன். அல்ட்ராசவுண்ட் மூலம் எனது கிட்னியின் ஆரோக்கியம் மற்றும் அதன் அளவு அளவிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

அவரது பெற்றோர் இது குறித்து கூறுகையில், “9 மாத கர்ப்பத்தில் இது குறித்து தெரிய வந்தபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். 12 வயதுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என தெரிவித்தனர்” என்றனர்.