விளையாட்டு

ஐபிஎல் புதிய ஸ்பான்ஸர்களாக பைஜூஸ், கொகோ கோலா ?

ஐபிஎல் புதிய ஸ்பான்ஸர்களாக பைஜூஸ், கொகோ கோலா ?

jagadeesh

ஐபிஎல் 2020 போட்டிக்கான புதிய டைட்டில் ஸ்பான்ஸர்களாக பைஜூஸ் மற்றும் கொகோ கோலா இடையே கடும் போட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் கசிந்தன. இதை மறுத்த பிசிசிஐ, ஸ்பான்ஸர்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என முதலில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ கடந்த சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்ததாக கூறப்பட்டது. அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ - விவோ நிறுவனமும் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டைட்டில் ஸ்பான்ஸர்களை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் வெளியானது. இப்போது ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்கு ஆன்லைன் கல்வி செயலியான "பைஜூஸ்" நிறுவனமும், குளிர்பான நிறுவனமான கொகோ கோலாவுக்கும் போட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் பைஜூஸ் நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க ரூ.300 கோடி தர தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸராகவும் பைஜூஸ் நிறுவனம் இருப்பதால், அந்நிறுவனமே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல ஜியோவும், அமேசானும் டைட்டில் ஸ்பான்ஸருக்கு ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.