விளையாட்டு

பட்லரின் சரவெடி ஆட்டத்தால் ரன் குவித்த ராஜஸ்தான் - முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த குஜராத்

பட்லரின் சரவெடி ஆட்டத்தால் ரன் குவித்த ராஜஸ்தான் - முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த குஜராத்

சங்கீதா

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு, 189 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் உள்ளன. மேலும், இன்று வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்கின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஆனால் 3 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது ஓவரின் கடைசிப் பந்தில் யாஷ் தயாளின் பந்து வீச்சில், சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் மற்றொரு துவக்க வீரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். இதில் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஜோப்பிடம் கேட்சாகி அவுட்டானர்.

அதன்பிறகு வந்த தேவ் தத் படிக்கல் மட்டும் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு நடையை கட்ட, மற்றொருபுறம் ஜோஸ்பட்லர், 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை உயர்த்தினார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சாஹா, தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ராஜஸ்தான் அணியில் போல்ட் பந்துவீச்சில் சஞ்சு சாம்சனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். தற்போது மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் (16) மற்றும் மேத்யூ வேட் (26) களமிறங்கி ஆடி வருகின்றனர்.