நேற்று இரண்டாம் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஜோஸ் பட்லர் 66 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கொடுத்த லட்டு போன்ற எளிய கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட ஆர்சிபி ரசிகர்கள் நொந்து போயினர்.
“Catches Win Matches" என்பது கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பழமொழிகளில் ஒன்றாகும். நேற்று நடைபெற்ற 2ஆம் தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ராஜஸ்தான் ராயல்ஸின் சேஸிங்கின்போது 11வது ஓவரில் ஹர்ஷல் படேலின் பந்து வீச்சில், ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் ஒரு எளிய கேட்ச் ஒன்றை ஜோஸ் பட்லர் எட்ஜ் செய்தார்.
அந்த நேரத்தில் 66 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார் பட்லர். லட்டு போல கைக்கு மிக அருமையாக வந்த கேட்சை தினேஷ் கார்த்திக் பிடிக்காமல் தவறவிட்டார். விளைவு அடுத்த 27 பந்துகளில் 40 ரன்களை குவித்து 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று விட்டார் பட்லர்.
கடைசி 10 ஓவர்களில் பிட்ச் ஸ்லோ ஆகும் என்று கமெண்டரியில் தெரிவித்த நிலையில், ஒருவேளை தினேஷ் கார்த்திக் அந்த கேட்சைப் பிடித்திருந்தால், ஆட்டம் ஆர்சிபி பக்கம் கூட திரும்பியிருக்க கூடும். ஆனால் தினேஷ் கார்த்திக் அதை செய்ய தவறியதால் ராஜஸ்தான் போட்டியை வென்று விட்டது. ஆர்சிபி அணி இந்த முறையும் இதயங்களை மட்டும் வெல்லும்படி ஆகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!