விளையாட்டு

“பும்ரா எங்கள் சொத்து” - நெகிழ்ந்த ரோகித் ஷர்மா

“பும்ரா எங்கள் சொத்து” - நெகிழ்ந்த ரோகித் ஷர்மா

webteam

பும்ரா தங்களுக்கு பெரும் பலம் என்றும், அவர் மற்ற பவுலர்களுக்கு தலைமையாக இருப்பதாகவும் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையெ நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் 69 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணியில் கலீல் அகமத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு அதே 162 ரன்களை சேர்த்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவர் போட்டியாக மாறியது. சூப்பர் ஓவரில் முதலில் பந்துவீசிய மும்பை அணியில், பும்ரா பந்துவீசினார். சிறப்பாக பந்துவீசிய அவர் 8 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து ஹைதராபாத் அணியை ஆல் அவுட் செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியை ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் மூலம் வெற்றிக்கு அழைத்து சென்றார். 3 பந்துகளிலேயே 9 ரன்களை எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 16 புள்ளிகளை பெற்று மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் இடம்பிடித்தது.

போட்டிக்கு பின்னர் பேசிய ரோகித் ஷர்மா, “முதல் நான்கு இடத்திற்குள் வந்தது நல்ல உணர்வை தந்துள்ளது. இந்த இடத்தை பிடிப்பது எளிதானது அல்ல. நாங்கள் தொடர்ந்து சீராக விளையாடிதால் இந்த முடிவு கிடைத்துள்ளது. 40 ஓவர்களுமே மைதானம் நன்றாக இருந்தது. நாங்கள் நினைத்த ரன்களை எங்களால் அடிக்க முடியாது என தெரியும். ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை சாய்த்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என நினைத்தேன். மணிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார். எங்கள் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள் பும்ரா எங்களுக்கு பெரும் பலமாக இருந்தார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை முன்னேற்றிக் கொள்கிறார். அவர் மற்ற பவுலர்களை வழிநடத்தும் எங்கள் சொத்தாக இருக்கிறார். சூப்பர் ஓவரிலும் அவர் சிறப்பாக பந்துவீசினார்” என்று கூறினார்.