ஆர்சிபியின் புதிய லோகோ தன்னுடைய பந்துவீச்சின் ஆக்ஷன் போலவே உள்ளது என பும்ரா கிண்டலடித்துள்ளார்
ஐபிஎல் அணிகளில் ஒரு முக்கியமான அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. பல முக்கிய வீரர்களை கொண்டிருந்தாலும் அந்த அணி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பையை வென்றதில்லை. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் அதிக கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளன. அணியின் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கத்தின் படம் இடம்பெற்றிருக்கும் புதிய லோகோவுக்கு ஆர்சிபி ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த லோகோ மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த விஜய் மல்லையா, 'நல்லது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லோகோவின் வடிவம் குறித்து கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் பும்ரா. இது குறித்து தெரிவித்துள்ள அவர், கூல் லோகோ. இது என்னுடைய பந்துவீச்சின் ஆக்ஷன் போலவே உள்ளது என தெரிவித்துள்ளார். பும்ராவின் இந்தக் கிண்டல் கருத்தை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். இது நிச்சயம் பும்ராவின் ஸ்டைல்தான் என கிரிக்கெட் ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.