ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி, தொடரை சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் 329 ரன்கள் குவித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்தது.
நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வேட் 117 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 2- 2 என்ற கணக்கில் சமன் செய்தது. இங்கிலாந்து வீரர்கள் ஸ்டீவர்ட் பிராட், ஜேக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். தொடர் நாயகன் விருது ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
ஆஷஸ் தொடர் 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு டிரா ஆகியுள்ள நிலையில், கடந்த முறை சாம்பியன் என்ற முறையில் ஆஸ்தி ரேலியாவுக்கு கோப்பை வழங்கப்பட்டது.