விளையாட்டு

‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ

‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ

webteam

பிரிட்டிஷ் ஆர்ஜே ஒருவர் ‘டோல்’ கருவி மற்றும் பாங்க்ரா நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டு ‘பாரத் ஆர்மி’ என்ற இந்திய ரசிகர்கள் பட்டாளத்தில் இணையவுள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கவுள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். வழக்கமாக இந்திய அணி எங்கும் சென்று கிரிக்கெட் விளையாடினாலுன் அங்கு இந்திய அணிக்கு ஆதரவளிக்க ரசிகர் வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் முக்கியமானவர்கள் ‘பாரத் ஆர்மி’ என்ற ரசிகர்கள் குழு. இந்தக் குழு உலகளவில் பிரபலமான ரசிகர்கள் குழு. இந்தக் குழுவினரும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஆதரவளிக்க தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் பிபிசியின் கிறிஸ் ஸ்டார்க் ‘பாரத் ஆர்மி’ ரசிகர்களை சந்தித்தார். இவரை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஃபிளிண்டாஃப் (flintoff)  இந்திய ரசிகர்களிடம் அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில், கிறிஸ் ஸ்டார்க் மற்றும் ஃபிளிண்டாஃப் ஆகியோர் பாரத் ஆர்மியை சந்திக்க செல்கின்றனர். அங்கு சென்ற கிறிஸ் ஸ்டார்க் ‘டோல்’ இசைக்கருவி மற்றும் பாங்க்ரா நடனம் ஆகியவற்றை கற்றுக் கொள்ளும் காட்சி வருகிறது. இவை அனைத்தையும் அவர் 10 நிமிடங்களில் கற்றுக் கொண்டதாக ஸ்டார்க் கூறுகிறார். அதன்பின்னர் இவர் பாரத் ஆர்மி ரசிகர்களுடன் சேர்ந்து இசைக்கருவி இசைத்து பாங்க்ரா நடனம் ஆடுகிறார். இறுதியில் இவர் ஃபிளிண்டாஃப்பிற்கு நன்றி தெரிவிக்குமாறு காட்சி இடம்பெற்றுள்ளது. 

இந்தவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்டுகளித்த இந்திய ரசிகர்கள் கிறிஸ் ஸ்டார்க் உலகக் கோப்பை தொடரில் பாரத் ஆர்மியுடன் சேர்ந்து மைதானத்தில் நடனமாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.