விளையாட்டு

கவலை வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன்: பிரையன் லாரா

கவலை வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன்: பிரையன் லாரா

தான் நலமாக இருப்பதாகவும், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாகவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் நிகழ்ச்சி மற்றும் வர்ணனைக்காக பிரையன் லாரா இந்தியாவில் உள்ளார். இவர் உலகக் கோப்பை தொடர் சம்பந்தமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்காக பிரையன் லாரா மும்பையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக பிரையன் லாரா மும்பையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து லாராவின் உடல் நிலை குறித்து மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி லாராவிற்கு ஆஞ்சியோகிராஃபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து லாரா விளக்கமளித்துள்ளார் " நேற்று வழக்கத்தை விட அதிகமாக ஜிம்மில் கூடுதல் உடற்பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது என் நெஞ்சில் திடீரென அழுத்தம் ஏற்பட்டது, கடுமையான வலியையும் உணர்ந்தேன். வலி தொடர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்கள் எனக்கு பல்வேறு மருத்துவச் சோதனைகள் மேற்கொண்டனர். அதில் இரண்டு மருத்துவச் சோதனையின் முடிவு நேற்றே வந்தது. அதில் பிரச்னை ஏதும் இல்லை என மருத்துவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்".

மேலும் தொடர்ந்த லாரா " என் மேல் அக்கறை கொண்டு விசாரித்தவர்களுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன் மும்பை ஹோட்டலுக்கு இன்று திரும்பி விடுவேன். விரைவில் வெஸ்ட் இண்டீஸ்க்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன். விரைவில் முழு உடல் நலத்துடன் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்". 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.