விளையாட்டு

கோப்பா அமெரிக்கா கால்பந்து: பெருவை பந்தாடி பிரேசில் அபார வெற்றி

கோப்பா அமெரிக்கா கால்பந்து: பெருவை பந்தாடி பிரேசில் அபார வெற்றி

jagadeesh

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை வென்றது.

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பிரேசிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 10 ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடக்கிறது. பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, "பி" பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

இதில் "பி" பிரிவுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் - பெரு நாடுகள் மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்து பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. இதில் 12 ஆம் நிமிடத்தில் பிரேசிலின் அலெக்ஸ் சாண்ட்ரோ முதல் கோல் அடித்தார். இதனையடுத்து பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் பந்தை திறமையாக கையாண்டு 68 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலை பதிவு செய்தார். இந்தப் போட்டியின் எந்தவொரு சூழலிலும் பெரு ஆதிக்கத்தை செலுத்த பிரேசில் வீரர்கள் விடவில்லை.

இதன் பின்பு தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரேசில் 89 ஆவது நிமிடத்தில் எவர்டன் ரிபைரோ 3ஆவது கோலை பதிவு செய்தார். இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்திலும் பிரேசில் தன்னை தளர்த்துக்கொள்ளாமல் 93 ஆவது நிமிடத்தில் ரிச்சர்லிசன் 4 ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து பெருவை 4-0 என்ற கணக்கில் பிரேசில் வென்றது.