விளையாட்டு

கோபோ அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பிரேசில் அசத்தல் வெற்றி

கோபோ அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பிரேசில் அசத்தல் வெற்றி

jagadeesh

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வெனிசுலா அணியை நடப்புச் சாம்பியனான பிரேசில் 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் நேற்று முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டியை கொலம்பியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருந்தன. அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் நடந்ததை அடுத்து கொலம்பியா இந்த போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அர்ஜென்டினாவும் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதையடுத்து இந்த போட்டி பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, "பி" பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரேசில் மற்றும் வெனிசுலா அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் இருந்தே பிரேசில் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் மார்கின்ஹோஸ் முதல் கோல் அடித்தார்.

பின்பு 64 ஆவது நிமிடத்தில் பிரேசிலின் ஸ்டார் வீரர் நெய்மர் 2ஆவது கோலை பதிவு செய்தார். பின்பு 89 ஆவது நிமிடத்தில் கேப்ரியல் பர்போசா மூன்றாவது கோலை அடித்தார். இரண்டுப் பாதிகளின் முடிவிலும் வெனிசுலா வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.