விளையாட்டு

ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் !

ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் !

jagadeesh

டி20 போட்டிகள் ரன் குவிக்கும் களமாக பார்க்கப்பட்டாலும், அதிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த வீரர்கள் தவறவில்லை. அதன்படி, ஐபிஎல் தொடரில் இதுவரை 19 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளனர்.

சிறிய மைதானங்கள், பவர்ப்ளே விதி என பல சாதக அம்சங்கள் இருப்பதால் டி20 போட்டிகளில் ரன் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சர்வசாதாரணமாக உள்ளது. ஆனால், அதிரடிக்கு மத்தியில் அடுக்கடுக்காக விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பந்து வீச்சாளர்கள் தவறவில்லை. ஐபிஎல்லில் இதுவரை 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசன்களில் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தப்படவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர்கள் அசத்தியுள்ளனர்.

அதிலும், சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை தனதாக்கியுள்ளார். பிரதான பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி பகுதி நேர பந்துவீச்சாளர்களும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வியக்க வைத்துள்ளனர். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்து யுவராஜ் சிங் மிரள வைத்தார். உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக உள்ள ரோகித் சர்மா, ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது, ஹாட்ரிக் எடுத்தார்.

அவர் தற்போது கேப்டனாக உள்ள மும்பை அணிக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாட்ரிக் எடுத்து அமர்களப்படுத்தினார். இளம் வீரர்களுக்கே ஹாட்ரிக் விக்கெட் எட்டாக் கனியாகவுள்ள நிலையில், தனது 41 ஆவது வயதில் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பிரமிக்க வைத்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக களம் கண்ட தாம்பே, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார். நடப்பு சீசனில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனைப் பட்டியலில் இணையப் போகும் வீரர்கள் குறித்து இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.