விளையாட்டு

உலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு

webteam

ஐசிசி தொடர்களில் சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

12ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி முடிவுடைந்தது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 241 ரன்கள் குவித்தன. இதனையடுத்து யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை பல கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து தள்ளினர். 

இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஐசிசி தொடர்களில் ஒரு போட்டி டையில் முடிந்தால், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுக்கும் பட்சத்தில் மீண்டும் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும். இந்த முடிவு ஐசிசியின் கிரிக்கெட் குழுவின் பரிந்துரையின் படி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.