அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ள ஹெலிகாப்டரின் பெயர் AH-64 Apache. அதிவேகமாகச் சுழலும் நான்கு பிளேடுகள், இரண்டு எஞ்சின் போன்றவற்றைக் கொண்ட அபாச்சி ஹெலிகாப்டரை வடிவமைத்தது விமானத் தயாரிப்புக்கு பெயர்பெற்ற போயிங் நிறுவனம்.
தாக்க வேண்டிய இலக்கை கண்டறிவதற்குப் பயன்படும் சென்சார், இரவு நேரத்தில் துல்லியமான காட்சிகளைக் காண உதவும் தொலைநோக்கி போன்றவை ஹெலிகாப்டரின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரையிறங்கும் சக்கரங்களுக்கு நடுவே நவீனத் துப்பாக்கி, Hellfire ஏவுகணைகளை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் ஆகியவை உள்ளன.
இருவர் அமர்ந்து செல்லும் வகையில் அபாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஹெலிகாப்டரை இயக்கும் நேரத்தில் மற்றொருவர் ஆயுதங்களை பயன்படுத்தி இலக்கைத் தாக்கும் பணியில் ஈடுபடுவார். அபாச்சி ரக ஹெலிகாப்டரை இயக்குபவர்களுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அபாச்சி ஹெலிகாப்டர், தொடர்ந்து 1200 குண்டுகளை சுடும் வலிமை பெற்றது. பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் குறிபார்த்துச் சுடுவதற்குத் தேவையான காட்சிகளைக் காட்டும் தொலைநோக்கி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தலையசைவைப் புரிந்து கொண்டு வெளிப்புறக் கேமராக்கள் செயல்படுவதற்கும் இவை துணை புரிகின்றன. AH-64 Apache ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தவிர கிரீஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து, சிங்கப்பூர், சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.
1986-ம் ஆண்டு ராணுவப் பயன்பாட்டுக்கு வந்த அபாச்சி, பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவங்களுக்கு பலம் சேர்த்தது. இரு ஆண்டுகளுக்கு முன் லிபியாவில் கடாஃபியை முடக்குவதற்கு நடந்த முயற்சியில் பிரிட்டனுக்கு உதவியதும் இவ்வகை ஹெலிகாப்டர்கள்தான். தற்போது இந்தியாவும் இந்த ஹெலிகாப்டரை வாங்கவுள்ளது