கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் ஒத்திவைக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும் என மாநில கிரிக்கெட் சங்கங்ளுக்கு கங்குலி உறுதியளித்துள்ளார்.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இத்தொடர் இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் மார்ச் 20 வரை நடக்க இருந்தது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், ரஞ்சிக் கோப்பை, சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் ஒத்திவைக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு கங்குலி எழுதிய கடிதத்தில், ''கொரோனா பரவல் மோசமடைந்து வருவது உங்களுக்கே தெரியும். அதன் காரணமாகவே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் ஒத்திவைக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும். திருத்தப்பட்ட போட்டி அட்டவணையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம். உங்கள் ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி. தயவுசெய்து உங்களை கவனித்துக் கொண்டு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்" என்று கங்குலி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு