விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ரூ. 8 கோடியை அள்ளியது பெங்களூரு அணி!

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ரூ. 8 கோடியை அள்ளியது பெங்களூரு அணி!

webteam

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி, முதல்முறையாகக் கோப்பையை கைப்பற்றியது.

ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி குறுக்கிட்டதால் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில், லீக் ஆட்டம் முடிந்து பெங்களூரு எப்.சி. - எப்.சி.கோவா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி, தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போல் 2015-ம் ஆண்டில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கோவா அணி, 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்கு வந்தது. இந்த இறுதிப் போட்டி மும்பையில் நேற்று இரவு நடந்தது.

முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆனால் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் போடாததால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. அந்த அணி வீரர் ராகுல் பெகே (Rahul Bheke) அந்த கோலை அடித்தார்.

கோவா அணியால் அதற்கு பிறகு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில், பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற் கடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி முதல்முறையாகக் கோப்பையை கைப்பற்றியது. கோவா அணி 2-வது முறையாக இறுதிச் சுற்றில் தோற்றுள்ளது. 

வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பெற்ற கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.