நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது வெற்றியை ஈட்டியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கெய்ல், கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிரடி விளாசலால், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் குவித்தது. கெய்ல்-கோலி இணை முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 77 ரன்கள் விளாசினார். கோலி 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். டிராவிஸ் ஹெட் 30 ரன்களும், கேதர் ஜாதவ் 38 ரன்களும் சேர்த்தனர்.
214 ரன்கள் என்ற கடின இலக்குடன் குஜராத் அணியும் வேகமாக ரன்கள் சேர்த்தது. மெக்கல்லம் 44 பந்துகளில் 7 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 72 ரன்கள் விளாசினர். கேப்டன் ரெய்னா 8 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். இளம் வீரர் இஷான் கிஷான் 16 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். எனினும் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. பெங்களூரு அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.