கால்பந்து விளையாட்டில் இந்தத் தலைமுறையின் சிறந்த அணியாகத் திகழும் பெல்ஜியம், உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பனாமா அணியை எதிர்கொள்கிறது.
உலகத் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி, நடப்புத் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது. பெல்ஜியம் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில், 13 பேர் இங்லீஷ் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடியுள்ளனர். தகுதிச் சுற்றில் 10 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியைச் சந்திக்காததால், நடப்புத் தொடரில் நம்பிக்கையுடன் பெல்ஜியம் களம் காண்கிறது. இங்கிலீஷ் ப்ரிமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வரும் முன் கள வீரர் எடன் ஹசார்ட், பெல்ஜியம் அணியின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்படுகிறார். தமது தேசிய அணிக்காக 88 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹசார்டின் அனுபவம் , நடப்புத் தொடரில் பெல்ஜியத்திற்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது.
சர்வதேச போட்டிகளில் 36 கோல்கள் அடித்துள்ள ரோமெலு லுகாகு , நடுக்கள வீரர் கெவின் டி புருய்னே ஆகியோரும் கோல் மழை பொழிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பெல்ஜியம் அணியின் கேப்டன் வின்சென்ட் கோம்பனி , தடுப்பாட்டக்காரர் தாமஸ் வெர்மாலென் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாதது பெல்ஜியம் அணியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பனாமா, துனிஷியா போன்ற அணிகளை உள்ளடக்கிய எளிய பிரிவில் இடம் பெற்றுள்ளதால், பெல்ஜியம் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் இருக்காது.