ஆசிய லெவன் அணிக்கும் உலக லெவன் அணிக்கும் இடையே நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் பட்டியல் இன்னும் அனுப்பப்படவில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி மார்ச் 18, 21 தேதிகளில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் இடையிலான டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வங்கதேச தலைநகரான தாக்காவில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆசிய லெவனில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற இருக்கின்றனர். உலக லெவனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக இந்தியா சார்பில் ஆசிய லெவனில் பங்கேற்கவுள்ள வீரர்களாக விராட் கோலி, ஷிகர் தவான், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரின் பெயர் பட்டியலை அனுப்பியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு பேட்டியளித்த கங்குலி " இந்திய வீரர்கள் அந்தத் தேதிகளில் விளையாட தயாராக இருக்கிறார்களா அல்லது வேறெதும் போட்டிகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பின்புதான் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். எனவே இது குறித்து எதுவும் இறுதி செய்யப்படவில்லை, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது" என்றார் அவர்.