சர்பராஸ் கானை ஏன் டெஸ்ட் அணியில் எடுக்கவில்லை என்றும், எதற்காக சூர்யகுமார் அணியில் சேர்க்கப்பட்டார் என்பதும் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தேர்வுகுழு உறுப்பினர் ஸ்ரீதரன் சரத்.
கடந்த 3 ரஞ்சிகோப்பை தொடர்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சர்பராஸ் கான், ஆஸ்திரெலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்காதது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் பல்வேறு விமர்சனங்களை அது எதிர்கொண்டது.
இந்திய அணியின் தேர்வுக்குழுவை சாடியிருந்த இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “அணியில் ஸ்லிம்மான வீரர்கள் தான் வேண்டுமென்றால் நீங்கள் பேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் `சர்பராஸ் கான் ஏமாற்றப்பட்டுவிட்டார்’ போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் கூட, பிசிசிஐ-ன் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துகளும் தெரிவிக்கப்படாமலே இருந்துவந்தது. இந்நிலையில் சமீபத்திய பிசிசிஐ தேர்வுக்குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீதரன் சரத் சூர்யகுமாரின் இடம் குறித்தும், ஏன் சர்பராஸ் கான் அணியில் இல்லை என்பது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்பராஸ் கான் எங்கள் ரேடாரில் இருக்கிறார்..அவருக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்!
தேர்வுக்குழுவிற்கு ’அணியின் கட்டமைப்பு’ என்பது தான் முதலில் பார்க்கவேண்டிய விஷயமாக இருக்கிறது என்று தெரிவித்த அவர், சர்பராஸ் கான் குறித்து பேசுகையில், “அவர் எங்கள் ரேடாரில் இருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயம் அணியில் இருக்கிறது. சரியான நேரத்தில், சர்பராஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்திய அணியை பொறுத்தவரையில் முதலில் அணியின் கட்டமைப்பு மற்றும் பேலன்ஸை தான் பார்க்க வேண்டியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அணியின் பேலன்ஸ் குறித்து பார்த்தால், சர்பராஸ் கான் ஒரு மிடில் ஆர்டர் பேட்டராக இருக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரையில், மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என நிறைய வீரர்கள் நிறைந்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது சிறிது காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் போட்டியின் போது இடம்பெறவில்லை என்றால் மட்டும் தான் அணியில் சூர்யாவிற்கு இடம் கிடைக்கும் வாய்ப்பு அமையும் என்று தெரிகிறது.
சூர்யா எதற்கு டெஸ்டில் எனக்கேட்கிறார்கள்? மறந்துவிடாதீர்கள் முதல்தர போட்டியில் 5000 ரன்கள் குவித்துள்ளார்!
டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்தது குறித்து பேசியிருக்கும் அவர், “சூர்யகுமார் எதற்கு அணியில் என கேட்கிறார்கள். அவரால் எந்த இடத்திலிருந்தும் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை கையில் எடுக்க முடியும். எதிரணியின் தாக்குதலை முறியடிக்க அவரிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன. மறந்துவிடாதீர்கள் அவர் முதல்தர போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.