விளையாட்டு

பிரமாண்ட மைதானத்தின் "கழுகுப் பார்வை" - படத்தை வெளியிட்ட பிசிசிஐ

jagadeesh

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கட்டப்பட்டு முடிவும் தருவாயில் இருக்கும் உலகின் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தின் கழுகுப் பார்வை படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது முக்கியமான விளையாட்டு. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் உண்டு. ரசிகர்களின் ஆதரவே ஐபிஎல் போன்ற புதிய போட்டிகள் தொடங்கப்படவும், அது வெற்றி அடையவும் காரணம். நாளுக்கு நாள் கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குஜராத் மாநிலம் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உருவாகி இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம்தான் அது. இந்த மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. இந்த மைதானம். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையையொட்டி, மொடேராவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் வல்லபாய் படேல் மைதானத்தில் "நமஸ்தே ட்ரம்ப்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.