விளையாட்டு

தனக்கான வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் - கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கங்குலி

ச. முத்துகிருஷ்ணன்

இந்திய அணி வீரர் விராட் கோலி தனக்கான வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

முன்னணி வீரரான விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சரியாக சோபிக்காததால் முன்னாள் வீரர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 30 ரன்களும், 20 ஓவர் போட்டியில் 12 ரன்களையும் எடுத்திருந்தார்.

இந்நிலையில், அவரது ஆட்டம் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, விளையாட்டில் அனைத்து வீரர்களுக்கும் இதுபோன்ற சறுக்கல் ஏற்படுவது இயல்பு என தெரிவித்தார். சச்சின், டிராவிட் மற்றும் தமக்கும் இதுபோன்ற நிலை வந்ததாகவும், வருங்கால வீரர்களுக்கும் இதுபோன்ற நிலை வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நிச்சயமாக, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் செய்த சாதனைகளை பாருங்கள். அது திறமை மற்றும் தரம் இல்லாமல் நடக்காது. ஆம், அவர் கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறார். அது அவருக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த வீரராக இருந்தார். அவரது தற்போதைய ஆட்டம் தற்போது நன்றாக இல்லை. அவரே அதையும் அறிவார். அவர் திரும்பி வந்து சிறப்பாக செயல்படுவதை நான் காண விரும்புகிறேன்.

விளையாட்டில் சறுக்கல் நடக்கும். அனைவருக்கும் இது நடந்தது. இது சச்சினுக்கும், ராகுலுக்கும் நடந்தது, எனக்கும், கோஹ்லிக்கும் நடந்தது. வருங்கால வீரர்களுக்கும் இது நடக்கும். அது விளையாட்டின் ஒரு பகுதி. விராட் கோலி தனக்கான வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் ” என்று கூறினார் கங்குலி.