விளையாட்டு

"தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை"-பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு !

jagadeesh

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து உலகெங்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல வீரர்கள் தோனிக்கு  ஃபேர்வெல் மேட்ச் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு கருத்துகளும் சர்ச்சைகளும் இப்போது வரை செய்தியாகி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டக் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் "நான் எப்போதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே பேசக்கூடிய நபராக இருப்பேன். ஆனால் இப்போது நான் இதை சொல்லியே ஆக வேண்டும். ஆம், பிசிசிஐக்கு இது ஒரு தோல்வி. தோனி போன்ற மிகப்பெரிய வீரர்களை அவர்கள் சரியான முறையில் நடத்தவில்லை. அவருடைய ஓய்வு இதுபோல முடிந்திருக்க கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன்.நான் நினைப்பதையே அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களும் நினைக்கிறார்கள்.பிசிசிஐயிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் தோனியை சரியாக நடத்தவில்லை இது என் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

மேலும் பேசிய சக்லைன் முஷ்டக் "அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் என்பது மட்டுமே எனக்கு சந்தோஷம். ஆனால் சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வு என்பது வேறு விதமாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். எனக்கும் அதுபோன்ற கனவுகள் இருந்தது. ஆனால் எனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக என்னுடைய கிரிக்கெட் ஓய்வு கோலாகலமாக அமையவில்லை. எனக்கு தெரியும் தோனிக்கும் அதுபோன்ற கனவு இருந்து இருக்கும்" என்றார் அவர்.