விளையாட்டு

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: டி சில்வா சதத்தால் நிமிர்ந்தது இலங்கை!

webteam

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, கொழும்பு நகரில் நடந்துவருகிறது. முதல் நாளில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. 36.3 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் முடிக்கப்பட்டது. நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ் 2 ரன்னிலும் அடுத்து வந்த பெரேராவும் டிக்வெல்லாவும் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். கருணாரத்னே 65 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, தனஞ்செய டி சில்வாவின் சதத்தால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சில்வா 109 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளையும் போல்ட் 3 விக்கெட்டுகளையும்
வீழ்த்தினர்.

இதையடுத்து நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ஜீத் ராவலும் லாதமும் ஆட்டத்தை தொடங்கினர். ராவல், ரன் கணக்கை தொடங்கும் முன்பே தில்ருவன் பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து லாதமும் கேப்டன் வில்லியம்சனும் இணைந்து ஆடி வருகின்றனர்.