விளையாட்டு

சொந்த மண்ணில் சாம்பியன் - 44 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைத்த ஆஷ்லி பார்ட்டி

சொந்த மண்ணில் சாம்பியன் - 44 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைத்த ஆஷ்லி பார்ட்டி

சங்கீதா

ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றை பிரிவு டென்னிஸ் போட்டியில் 44 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்லி பார்ட்டி வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் ரோடு லாவர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் இடம் வகிக்கும் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மற்றும் 27-ம் நிலை அமெரிக்க வீராங்கனையான டேனியலே காலின்ஸை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6 - 3 என்று ஆஷ்லி பார்ட்டி எளிதாக கைப்பற்றினர். ஆனால், இரண்டாவது செட்டில் டேனியலே காலின்ஸ் கடும் நெருக்கடி கொடுத்ததால் போட்டி டை பிரேக்கர் ஆனது.

பின்னர் ஆஷ்லி பார்ட்டி 7 - 6 (7/2 ) என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு ஓ நீல் (O'Neill) என்பவர் ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றப் பிறகு, அந்த மண்ணை சேர்ந்த ஆஷ்லி தான் சுமார் 44 வருடங்களுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

போட்டிக்கு முன்னதாக ஓ நீலிடம் ஆஷ்லி குறித்து கேட்டதற்கு, ‘நான் ஆஷ்லியின் மிகப்பெரிய ரசிகை. இந்த கிராண்ட் ஸ்லாம் பட்டத்திற்கு மிகவும் தகுதியானவள்.  எனக்குப் பிறகு இந்த பட்டத்தை அவளிடம் நான் கொடுப்பதில் பெருமை அடைகிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிட்த்தக்கது.