கரிபீயன் பிரிமீயர் லீக் (சிபிஎல்) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணி, கோப்பையைக் கைப்பற்றியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல, சிபிஎல் கிரிக்கெட் லீக் தொடர், வெஸ்ட் இண்டீஸில் கடந்த 6 வருடமாக நடந்து வருகிறது. இதன் 7-வது தொடர் கடந்த ஒரு மாதமாக வெஸ்ட் இண்டீஸில் நடந்து வந்தது. 6 அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணியும் சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய பார்படாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக ஜேசன் கார்டர், 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய கயானா அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணி வெற்றி பெற்று, 2 வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
கயானா அணி, 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் தோல்வியையே சந்தித்து வருவது அந்த அணியினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.