நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, நாளை நடக்க இருந்த பங்களாதேஷ்-நியூசிலாந்து அணிகளுக் கு இடையிலான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கர மாகத் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்பி, ஓட்டலுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இயந்திர துப்பாக்கியுடன் வந்த ஒருவன், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர் சுவர் ஏறி குதித்து உயிர் தப்பினர். இதிலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர்.
(பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்)
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த விவரம் உட னடியாகத் தெரியவில்லை. இன்று தொழுகை நடத்த யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்துள்ளதாகவும் அவரிடம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை நடக்க இருந்த 3 வது டெஸ்ட் போட்டி, ரத்து செய்யப்பட்டுள்ளது.