டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் இந்திய அணிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. டெல்லியில் நிலவும் காற்று மாசால் வங்கதேச அணியினர் முகக் கவசம் அணிந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் டி20 போட்டி காற்று மாசுபாட்டால் ரத்தாகும் என்ற செய்தி பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்ய முடியாது. திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா "டெல்லியில் இருக்கும் காற்று மாசு குறித்து எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் நாளை நிச்சயம் போட்டி நடக்கும் என்பது மட்டும் தெரியும். கடந்த முறை இதேபோன்ற காற்று மாசு சூழலில் இலங்கை உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த ரோஹித் சர்மா "ஒரு கேப்டனாக என்னுடைய பணி மிகவும் எளிமையானது. விராத் உருவாக்கியிக்கும் அணியை அப்படியே கொண்டு செல்ல வேண்டும், அவ்வளவே. வங்கதேசம் அணி ஒன்றும் சாதாரண அணியல்ல. அவர்கள் எப்போதும் சிறப்பாகவே விளையாடக் கூடியவர்கள். பல முறை இந்திய அணிக்கு வங்கதேசம் சவாலாக இருந்துள்ளது. ஷகிப் மற்றும் தமீம் இக்பால் அணியில் இல்லாதது வங்கதேசத்துக்கு பின்னடைவுதான். ஆனாலும் வங்கதேசத்தை பலமான அணியாகவே கருதுகிறோம்" என்றார் அவர்.