விளையாட்டு

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: தமிம் இக்பால் அபார சதம்!

webteam

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன் எடுத்துள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட், ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

(நீல் வாக்னர்)

தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பாலின் சிறப்பான சதத்தால், அந்த அணி, கவுரவமான ஸ்கோரை எட்டியது. அவரைத் தவிர வேறு யாரும் நிலைத்து நிற்காததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தமிம் இக்பால் 126 ரன் எடுத்தார். லிடன் தாஸ் 29 ரன்னும் ஷட்மன் இஸ்லாம் 24 ரன் எடுத்தனர். 

நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டை அள்ளினார். சவுதி 3 விக்கெட்டையும் போல்ட், கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

(தமிம் இக்பால்)

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. அந்த அணியின் ஜீத் ராவலும் டாம் லாதமும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 86 ரன் எடுத்துள்ளது. ராவல் 51 ரன்னும் லாதம் 35 ரன்னும் எடுத்து ஆடி வருகின் றனர். இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடர்கிறது.