விளையாட்டு

டார்கெட் தெரியாமல் பேட் செய்த வங்கதேச அணி: 9 பந்துகள் வீசிய பிறகு ஆட்டம் நிறுத்தம்!

EllusamyKarthik

டார்கெட் தெரியாமல் வங்கதேச கிரிக்கெட் அணி பேட் செய்த நிலையில், 9 பந்துகள் வீசிய பிறகு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டார்கெட் என்ன என்று தெரியாமலேயே பேட் செய்துள்ளது வங்கதேச அணி. அந்த இன்னிங்ஸில் 9 பந்துகள் வீசிய நிலையில் டார்கெட்டை கூட்டுவதற்காக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவிந்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டியின் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு டக்வொர்த் லூயிஸ் முறையில் போட்டியின் நடுவர்கள் டார்கெட்டை கணக்கிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி 16 ஓவர்களில் வங்கதேச அணி 148 ரன்களை எடுக்க வேண்டியதாக இருந்தது. இருப்பினும் அதனை நடுவர்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஒரு வழியாக வங்கதேச அணி 170 ரன்களை 16 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும் என இறுதியில் சொல்லப்பட்டது.  இந்த போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்தது. 16 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.