விளையாட்டு

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 300+ ரன்கள்.. சாதனை படைக்கும் வங்கதேச அணி!

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 300+ ரன்கள்.. சாதனை படைக்கும் வங்கதேச அணி!

webteam

அயர்லாந்துக்கு எதிராக தொடர்ந்து 2 ஒருநாள் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததுடன், இந்த ஆண்டில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணியாகவும் வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அயர்லாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, 3 ஒருநாள் போட்டி தொடரில் தற்போது பங்கேற்றுள்ளது. இதில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

முன்னதாக டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி, வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி, அவ்வணியின் தொடக்க பேட்டர்கள் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். தமிம் இக்பால் 23 ரன்களில் வெளியேறினாலும், லிட்டன் தாஸ் மற்றும் ஹொசைன் ஷாண்டோ ஆகியோர் சிறப்பாக ஆடினர். லிட்டன் 70 ரன்கள் எடுக்க, ஹொசைன் 73 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். ஷகிப் அல் ஹாசன் 17 ரன்களில் வெளியேறினாலும் தாவித் 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவ்வணியின் விக்கெட் கீப்பர் ரஹீம் 60 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியுடன் 100 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார். அவருடைய அதிரடியால் வங்கதேச அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் கிரகாம் ஹூம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை அயர்லாந்து அணிக்கு வங்கதேசம் நிர்ணயித்திருந்தது.

ஆனால், அயர்லாந்து அணியின் அதிர்ஷ்டம், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில், அந்த இலக்கை எட்டுவதற்கு முன்பாகவே கடுமையான மழை பெய்ததால், 2வது இன்னிங்ஸ் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து இந்தத் தொடரில் வங்கதேசம் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

வங்கதேச அணி, கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் அயர்லாந்துக்கு எதிராக 338 ரன்கள் எடுத்தது. தற்போது இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 349 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து வங்கதேச அணி, 2 ஆட்டங்களில் 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வருடத்தில் அதிக ரன்கள் (300க்கும் மேல்) எடுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று எடுத்த 349 ரன்கள் மூலம் அது முதலிடத்தில் உள்ளது.

இரண்டாது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. அது, கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்களையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 330 ரன்களையும் பாகிஸ்தானுக்கு எதிராக 329 ரன்களையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.