விளையாட்டு

தவறை ஒப்புக்கொண்டார் ஆஸி. வீரர் பேன்கிராஃப்ட்!

தவறை ஒப்புக்கொண்டார் ஆஸி. வீரர் பேன்கிராஃப்ட்!

webteam

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தென்னாப்பிரிக்க அணி விளையாடி கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமருன் பேன்கிராப்ட், ஏதோ ஒரு மஞ்சள் நிற பொருளை தேவைப்படும்போது வெளியே எடுத்துவிட்டு உள்ளாடைக்குள் போடுவதுமாக இருந்தார். இது, கேமராவில் சிக்கியது.
பின்னர் அதை குளோசப்பில் பார்த்தால், அந்தப் பொருளை வைத்து அவர் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அதாவது பந்தில் பளபளப்புக் குறையாமல் இருக்க, அவர் வெளியில் இருந்து கொண்டு வந்த உப்புத்தாளை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. அது மஞ்சள் நிற டேப் என்பது பிறகு தெரிய வந்தது.

3ஆம் நாள் ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராஃப்ட், தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார். இதனிடையே ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட்டின் இந்த செயலுக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.