விளையாட்டு

அதிரடியில் பொளந்துகட்டிய பஞ்சாப்பின் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன்! ஆர்சிபிக்கு 210 ரன் இலக்கு!

அதிரடியில் பொளந்துகட்டிய பஞ்சாப்பின் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன்! ஆர்சிபிக்கு 210 ரன் இலக்கு!

ச. முத்துகிருஷ்ணன்

பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவுக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்களை குவித்தது பஞ்சாப்!

ஐபிஎல் 2022 சீசனில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் தரப்பில் ஓப்பனர்களாக தவானும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ சிக்ஸர் விளாசினார்.

ஹசில்வுட் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ 2 பவுண்டரி, 2 சிக்ஸரி விளாசி வான வேடிக்கை காட்டினார். சிராஜ் வீசிய ஓவரிலும் சிக்ஸர் விளாச, தவானும் தன் பங்குக்கு அதிரடி காட்டியதால் 4 ஓவர் முடிவதற்குள்ளேயே 50 ரன்களை எளிதாக கடந்தது பஞ்சாப் அணி. ஒரு வழியாக அதிரடிக்கு திரும்பி கொண்டிருந்த தவானை மேக்ஸ்வெல் க்ளீன் போல்டாக்கி வெளியேற்ற ஆர்சிபி ஆறுதல் அடைந்தது.

அடுத்து வந்த பனுகா ராஜபக்சேவுடன் கைகோர்த்த பேர்ஸ்டோ தன் அதிரடியை தொடர்ந்ததால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. சிக்ஸர் விளாசியபடி 21 பந்துகளிலேயே அரைசதம் கடந்து அசத்தினார் பேர்ஸ்டோ. ராஜபக்சே ஒரு ரன்னில் நடையைக் கட்ட, லிவிங்ஸ்டனுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார் பேர்ஸ்டோ. லிவிங்ஸ்டனும் பவுண்டரி விளாசி ஆர்சிபி பவுலர்களுக்கு தலைவலியாக மாறத் துவங்கினார்.

இருவரின் அதிரடியால் 9வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது பஞ்சாப் அணி. சபாஷ் அகமது பந்துவீச்சில் 66 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ அவுட்டானதும் ஆர்சிபி அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. அடுத்து வந்த மயங்க் அகர்வால் லிவிங்ஸ்டனுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 19 ரன்கள் மட்டும் எடுத்து மயங்க் அகர்வால் ஹர்ஷல் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். இருந்தபோதும் 15 ஓவர்களில் 150 ரன்களை கடந்து இருந்தது பஞ்சாப்.

அடுத்து ஜித்தேஷ் ஷர்மா 2 பவுண்டரிகளை எடுத்துவிட்டு ஹசரங்கா பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்ட, ஹர்ப்ரீத் ப்ரார் ஒரு சிக்ஸர் விளாசி விட்டு பெவிலியன் திரும்பினார். ஹசில்வுட் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை லிவிங்ஸ்டன் விளாச ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் லிவிங்ஸ்டன், ரிஷி தவான், ராகுல் சஹார் என மூவரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்தது.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது ஆர்சிபி அணி. ஆர்சிபியும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்ததால் 5 ஓவர்கள் முடிவில் 41 ரன்களை எடுத்துள்ளது. ஆனால் கோலி, டு பிளசிஸ், மகிபால் லோம்ரோர் ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது