விளையாட்டு

ஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் ! தங்கங்களை பறிகொடுத்த இந்தியா

ஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் ! தங்கங்களை பறிகொடுத்த இந்தியா

இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அந்நாட்டு தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 11 தங்கத்துடன், இறுதியாக பதக்க பட்டியலில் 8 ஆம் இடத்தை பிடித்தது. 2010 இல் நடந்தப் போட்டியில் 14 தங்கத்துடன் மொத்தம் 65 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6 ஆவது இடத்தை பிடித்ததது. ஆனால், இந்தாண்டு இந்தியா 9 தங்கத்தை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என சொல்லலாம். ஆம் பல இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் தங்க வேட்டையை தவிடி பொடியாக்கியவர்கள் பஹ்ரைன் நாட்டு வீரர்கள்.

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் 12 மற்றும் 14 ஆம் இடத்தில் இருந்த பஹ்ரைன் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 தங்கத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 16 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் இந்தியாவிடம் இருந்து மட்டும் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் 5 தங்கத்தை தட்டிப் பறித்தது பஹ்ரைன். இது எப்படி சாத்தியமானது ? இம்முறை ஆசியப் போட்டிகளில் எப்படியும் தங்கம் வென்றே தீர வேண்டும் என்று முடிவுக்கட்டிய பஹ்ரைன் அரசு. தனது சொந்த நாட்டு வீரர்களை நம்பாமல், தங்கள் நாட்டுக்காக பங்கேற்க ஆப்பிரிக்க வீரர்களை களமிறக்கியது. பஹ்ரைன் அரசு நைஜீரியா, கென்யா, சூடான் நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியளித்து, வேலை கொடுத்து, குடியமர்த்தி தங்கள் நாட்டுக்காக பங்கேற்க வைத்துள்ளனர்.

ஆப்பிரிக்கர்கள் இயற்கையிலேயே அதிக உடல் சக்தி கொண்டவர்களாக தடகள விளையாட்டில் அறியப்படுகிறார்கள். முக்கியமாக நைஜீரியா, கென்யா வீரர்களை மாரத்தான் மற்றும் இதர தடகளப் பிரிவுகளில் உலகளவில் பல சாதனைகளை புரிந்தவர்கள். இதுபோல பல விளையாட்டுகளில் பல நாடுகள் வீரர்களை இறக்குமதி செய்து பயிற்சிக் கொடுத்து தங்களது நாட்டு சார்பாக போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளது. கிரிக்கெட்டில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வே அணியில் கோலோச்சிய குட்வின், ஜான்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் டுட்டீ சந்த், ஹிமா தாஸ், சுதா சிங், வீரர் முகமது அனாஸ் என பல இந்திய நட்சத்திரங்கள் தங்கம் வெல்ல முடியாமல் தடுமாறியதற்கு பஹ்ரைன் நாட்டின் இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிரிக்க வீரர்கள்தான் காரணம். இதேபோல சுதா சிங், நேற்று நடந்த கலப்பு தடகளத்தில் இந்தியா, பஹ்ரைனிடம் தான் தங்கத்தை இழந்தது. இதில் ஓடிய 4 பேரில் 3 பேர் நைஜீரியாவில் பிறந்தவர்கள்.

இந்தியா ஒட்டுமொத்தமாக பஹ்ரைனுக்காக களமிறங்கிய ஆப்பிரிக்க தடகள வீரர்களிடம் 5 தங்கப் பதக்கத்தை இழந்துள்ளது. இப்போது ஆசிய நாடுகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகளில் பஹ்ரைன் அரசு ஆப்பிரிக்க வீரர்களை களமிறக்கியது பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விஷயங்களை உரிய சட்டத் திட்டத்தை உருவாக்கிய ஆசிய நாடுகளின் தடகள சம்மேளனம் வெளிநாட்டு வீரர்களை இறக்குமதி செய்வதை தடை விதிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.