'நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு டி.ஆர்.எஸ் கொடுத்தீர்கள்' என்று அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கேட்டார் பாபர் அசாம்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 124 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாபர் அசாம் அம்பயரிடம் கோபப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இலங்கை அணியின் இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 16வது ஓவரில், நிஷங்கா பேட்டிங் செய்ய, ஹஷன் அலி பந்து வீசினார். ஷார்ட் பிட்சாக போடப்பட்ட முதல் பந்து நிஷங்கா பேட்டில் பட்டு கேட்ச் ஆகியுள்ளது என்று நினைத்த பவுலரும், விக்கெட் கீப்பர் ரிஸ்வானும் தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அம்பயரிடம் டி.ஆர்.எஸ் கேட்டனர். எனினும் கேப்டன் பாபர் அசாம் டி.ஆர்.எஸ் கேட்கவில்லை. ஆனால் அம்பயர் அவராகவே டி.ஆர்.எஸ்-க்கு முறையிட்டு சிக்னல் காட்டினார். இது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பந்தை ஆய்வு செய்த 3வது நடுவர் 'நாட் அவுட்' என்று முடிவு கொடுத்தார். இதனால் ஒரு டி.ஆர்.எஸ்-ஐயும் பாகிஸ்தான் அணி இழந்தது. இதனால் கோபமடைந்த பாபர் அசாம், 'நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு சிக்னல் காட்டுகிறீர்கள். நான் உங்களிடம் கேட்டேனா?' என்பது போன்று வீரர்களை நோக்கியும், அம்பயரை நோக்கியும் ஆக்ரோஷமாக கேட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜடேஜாவின் காயத்தால் பிசிசிஐ கவலை