விளையாட்டு

ஐபிஎல் "டைட்டில் ஸ்பான்ஸர்" ! விருப்பப்படும் பதஞ்சலி

ஐபிஎல் "டைட்டில் ஸ்பான்ஸர்" ! விருப்பப்படும் பதஞ்சலி

jagadeesh

13-ஆவது ஐபில் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் கசிந்தன. இதை மறுத்த பிசிசிஐ, ஸ்பான்ஸர்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என முதலில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ கடந்த சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்ததாக கூறப்பட்டது. அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ - விவோ நிறுவனமும் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டைட்டில் ஸ்பான்ஸர்களை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் வெளியானது. இதனிடையே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்கு ஆன்லைன் கல்வி செயலியான "பைஜூஸ்" நிறுவனத்திற்கும், குளிர்பான நிறுவனமான கொகோ கோலாவுக்கும் போட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து "தி எகானமிக் டைம்ஸ்" நாளிதழ்க்கு பேட்டியளித்த பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திஜார்வாலா "ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க விரும்புகிறோம். ஐபிஎல் ஸ்பான்ஸராக இருப்பதன் மூலம் பதஞ்சலி நிறுவனத்துக்கு உலக வர்த்தகத்தில் ஒரு இடம் உருவாக வாய்ப்பு இருக்கும். பிசிசிஐக்கு முறைப்படி ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருப்பதற்கான கோரிக்கையை முன் வைக்க இருக்கிறோம்" என்றார்.

ஏற்கெனவே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸாரக இருப்பதற்கு பைஜூஸ், கொகோ கோலா, ஜியோ, ட்ரீம் 11, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம் ஆகியவை போட்டிப் போட தயாராக இருக்கிறது.