ஒலிம்பிக் அணிவகுப்பு முகநூல்
விளையாட்டு

விழா கோலம் பூண்ட பாரீஸ் நகரம்!ஒலிம்பிக் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி சென்ற இந்திய வீரர்கள்!

மழைக்கு மத்தியில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா செய்ன் நதிக்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா சார்பில் சரத்கமல், பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

PT WEB

மழைக்கு மத்தியில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா செய்ன் நதிக்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா சார்பில் சரத்கமல், பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்கியது. 33ஆவது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா புகழ்பெற்ற செய்ன் நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நடந்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியினை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. புகழ்பெற்ற ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் செய்ன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில் கிரீஸ் வீரர்களின் படகு சென்றது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தியபடி இந்திய வீரர், வீராங்கனைகளின் படகு அணிவகுப்பில் கலந்து கொண்டது.

மொத்தம் 85 படகுகளில் சுமார் 6 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பிற்கு மத்தியில் பல்வேறு கலைஞர்கள் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். அணிவகுப்பை தொடர்ந்து, புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் எதிரே கண்களை கவரும் இசை, நடனம், லேசர், டிரோன் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. புகழ்பெற்ற பாடகர் லேடி காகா, சிந்தியா ஈரிவோ, அரினா கிராண்டே உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதற்கிடையில், பிரஞ்சு வரலாற்றில் இடம்பிடித்த 10 பெண்களின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டு கவுரவிப்பட்டனர்.

ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்ட நிலையில், ஒலிம்பிக் சுடரை முன்னாள் கால்பந்து வீரர் ஜினடின் ஜிடேன், டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ஏந்தி செல்ல, பிரான்சின் முன்னாள் தடகள வீரர் ஜூடோகா டெடி ரைனர் மற்றும் மேரி ஜோ பெரெக் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினர். 33ஆவது ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடைபெறுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியையொட்டி சுமார் 45 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.