விளையாட்டு

அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்! - அசத்திய அக்ஸர் படேல்

அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்! - அசத்திய அக்ஸர் படேல்

jagadeesh

சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 5 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார். இந்தச் சாதனையை செய்த 9-ஆவது இந்திய வீரராகவும் அக்ஸர் படேல் திகழ்கிறார்.

சென்னையில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் அக்ஸர் படேல் இடம்பெற்றார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக அக்ஸர் படேல் இடம்பெறவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ஷபாஸ் நதீம் ஆடும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷபாஸ் நதீமும் ஜொலிக்கவில்லை, இந்தியாவும் தோற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் அக்ஸர் படேல் 2 விக்கெட்டை எடுத்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்து 5 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினார். இதனால் அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்திய 9-ஆவது வீரர் என்ற சாதனையயை படைத்தார் அக்ஸர் பட்டேல்.

இந்தப் பட்டியலில் முகமது நிசார், வாமன் குமார், ஆபித் அலி, திலீப் தோஷி, நரேந்திர ஹிர்வானி, அமித் மிஸ்ரா, அஸ்வின், முகமது சமி ஆகிய இந்திய வீரர்கள் தங்களது முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களாவார். போட்டிக்கு பின்பு பேசிய அக்ஸர் படேல் "இந்தப் போட்டி மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது. முதல் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்துவது மிகவும் சிறப்பானது. போட்டியின்போது பிட்சில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது என்று குல்தீப் யாதவ் என்னிடம் சொன்னார்" என்றார்.

மேலும் "அதனை மனதில் வைத்துக்கொண்டு நானும் என்னுடைய பந்துவீச்சு வேகத்தை மாற்றி மாற்றி பந்து வீசினேன். அப்போது பேட்ஸ்மேன்கள் தவறுகள் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் விக்கெட்டும் வீழத் தொடங்கியது" என்றார் அக்ஸர் படேல்.