இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மும்பை வந்த ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு உரிய முறையில் வரவேற்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வெளிநாட்டு வீரர்களுக்கு வரவேற்பு அளிப்பதில் புகழ்பெற்றது. ஆனால், மும்பை விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு உரிய முறையில் வரவேற்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வந்த ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தங்களது விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பைகளை தாங்களாகவே சுமந்து சென்று வேன்களில் வைத்தனர். பொதுவாக இந்தியாவுக்கு வரும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு உதவுவதற்காக சுமை தூக்குபவர்களை நியமிப்பது வழக்கம். ஆனால், இந்த வசதி தற்போது வந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.