விளையாட்டு

என்னா சேஸ்சிங்...! - ஆஸ்திரேலியா புதிய சாதனை

என்னா சேஸ்சிங்...! - ஆஸ்திரேலியா புதிய சாதனை

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற்ற 5-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியில் குப்தில், முன்ரோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இதனால், நியூசிலாந்து அணி 4.4 ஓவரில் 50 ரன்களையும், 9.2 ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. குப்தில் 30 பந்திலும், முன்ரோ 27 பந்துகளிலும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். 10.4 ஓவரில் நியூசிலாந்து அணி 132 ரன்கள் எடுத்திருந்த போது, தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அதிரடியாக விளையாடிய முன்ரோ 33 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசி அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய குப்தில் 54 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டர்கள் பறக்கவிட்டார். இருவரது விக்கெட்டையும் ஆஸ்திரேலிய டைய் கைப்பற்றினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் டைய், ரிச்சர்டுசன் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

244 ரன்கள் என்ற இமால இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான வார்னர், ஷார்ட் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். வார்னர் 24 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 8.3 ஓவரில் 121 ரன்கள் எடுத்தது.

வார்னரை தொடர்ந்து, லயன்18, மேக்ஸ்வெல் 31 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல், சிறப்பாக விளையாடி வந்த ஷார்ட் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அப்போது ஆஸ்திரேலிய அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த பின்ச் 14 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 எடுக்க ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்தது.  243 ரன்களை சேஸ் செய்ததன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. 

இந்தப் போட்டியில் இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் 32 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. முத்தரப்பு டி20 தொடரை பொறுத்தவரை ஓவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதும். ஆஸ்திரேலியா அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு அணிகளுடனும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துடனான 4வது லீக் போட்டியில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அதனையடுத்து, பிப்ரவரி 21-ம் தேதி 21-ம் தேதி நடைபெறவுள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு 2015ம் ஆண்டு ஜோகன்னஸ்பெர்க்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 236 ரன்களை சேஸ் செய்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆஸ்திரேலியா அணி முறியடித்துள்ளது.