விளையாட்டு

வியப்பில் ஆழ்த்திய ‘கவுல்டெர் நைல்’ - ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவிப்பு

வியப்பில் ஆழ்த்திய ‘கவுல்டெர் நைல்’ - ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவிப்பு

webteam

வெஸ்ட் இண்டீஸிடம் 38 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்து வியப்படையச் செய்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரின் 10வது லீக் போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 3 (8) மற்றும் கேப்டன் ஃபின்ச் 6 (10) ரன்களில் அவுட் ஆகினர். 

பின்னர் வந்த உஸ்மான் கவாஜா 13 (19) விக்கெட்டை இழக்க, அடுத்த வந்த ஸ்டீவென் ஸ்மித் நிலைத்து ஆடினார். இதற்கிடையே களமிறங்கிய மேக்ஸ்வேல் 0 (2) மற்றும் ஸ்டொயினிஸ் 19 (23) ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் வந்த கீப்பர் அலெக்ஸ் கரே ஸ்மித்துடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரும் 45 (55) ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 149 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து வந்த வேகப்பந்துவீச்சாளர் நாதன் கவுல்டெர் யாரும் எதிர்பார்க்காத பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியாலும், ஸ்மித்தின் நிதான ஆட்டத்தாலும் வெஸ்ட் இண்டீஸ் கதி கலங்கியது. 73 (103) ரன்களில் ஸ்மித் விக்கெட்டை இழக்க, நாதன் 60 பந்துகளில் 92 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் குவித்துள்ளது. வெறும் 38 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்திருப்பது கிரிக்கெட் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.