விளையாட்டு

ஆஸி.-பாக். முதல் டெஸ்ட்: 2 வருடங்களுக்கு பிறகு டேவிட் வார்னர் சதம்!

ஆஸி.-பாக். முதல் டெஸ்ட்: 2 வருடங்களுக்கு பிறகு டேவிட் வார்னர் சதம்!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அபார சதம் அடித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஆசாத் ஷபிக் 76 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரும் ஜோ பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் சதம் அடித்தார். இது அவருக்கு 22 வது டெஸ்ட் சதம் ஆகும்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர் அடித்த முதல் டெஸ்ட் சதம் இது. பர்ன்ஸ் 89 ரன்களுடனும் வார்னர் 101 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.