விளையாட்டு

2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்!

2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்!

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 283 ரன் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 50, ஹாரிஸ் 70, மற்றும் டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்திருந்தது. விராத் கோலி 82 ரன்னுடனும் ரஹானே 51 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத் திலேயே நாதன் லைன் பந்துவீச்சில் ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 51 ரன் எடுத்திருந்தார்.  அடுத்து ஹனுமா விஹாரி, விராத் கோலி யுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடினார். 

நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி அபார சதமடித்தார். இது அவரது 25 வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் இதற்காக 218 பந்து களை எதிர்கொண்டார். அவர் சதம் அடித்த அடுத்த சில நிமிடங்களில் விஹாரி, ஹசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 20 ரன் எடுத்திருந்தார். அடுத்து வந்த ரிஷாப் பன்ட் அதிரடியாக ஆடினார். 

மறுபக்கம் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராத் கோலி 123 ரன் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் தொடர்ந்து விழத் தொடங்கின. 

அடுத்து வந்த முகமது ஷமி, ரன் ஏதும் எடுக்காமலும் இஷாந்த் சர்மா ஒரு ரன்னிலும் ரிஷாப் 36 ரன்னிலும் பும்ரா 4 ரன்னிலும் லைன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 283 ரன்னில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 45 ரன் பின் தங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய தரப்பில் லைன் 5 விக்கெட்டும் ஸ்டார்க், ஹசல்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.