பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் கையும் களமாக சிக்கிய சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப் பிரிக்க அணி 311 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் சதமடித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. ரபடா, மோர்கல் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 2வது இன்னிங்கிஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 3ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ராம் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டிவில்லியர்ஸ் 51ரன்களுடன் குயின்டன் டி காக் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை விட தென்னாப்பிரிக்க அணி 294 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமருன் பேன்கிராப்ட், ஏதோ ஒரு மஞ்சள் நிற பொருளை தேவைப்படும்போது வெளியே எடுத்துவிட்டு உள்ளாடைக்குள் போடுவதுமாக இருந்தார். இது, கேமராவில் சிக்கியது. பின்னர் அதை குளோசப்பில் பார்த்தால், அந்தப் பொருளை வைத்து அவர் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. பந்தின் பளபளப்புக் குறையாமல் இருக்க உப்புத்தாள் போல ஒன்றை அவர் வெளியில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தியதாகத் தெரிந்தது. பின்னர் அது ஒரு மஞ்சள் டேப் என்பது தெரிய வந்தது.
பின்னர் இது நடுவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கருப்பு துணியை மட்டும்தான் வைத்திருந்தேன் என்றும் வேறு பொருள் இல்லை என்றும் கூறினார் பேன்கிராப்ட். பந்தை சேதப்படுத்தியது உறுதியானால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். ஐ.சி.சி. போட்டி நடுவரின் விசாரணைக்கு பிறகே என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேன்கிராப்ட் கூறும்போது, ‘நடுவர்களிடம் பேசினேன். என் மீது பந்தை சேதப்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறார்கள்’ என்றார்.