ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய சிறப்பான போட்டிகள் மூலம் கவனம் ஈர்த்தவர், வில் பொக்கோஸ்கி. 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2,350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதங்களும் அடக்கம். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது. தன்னுடைய திறமை காரணமாக 20 வயதில் தேசிய அணியில் விளையாடுவதற்கு இடம்பிடித்த பொக்கோஸ்கி, 22ஆவது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2020-21ஆம் ஆண்டு அறிமுகமான அவர், சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62 ரன்களையும், பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களையும் எடுத்தார். இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக வருவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், அவர் தொடர்ந்து பந்தால் தாக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகும் நிலையும் தொடர்கதையாகியுள்ளது.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார். இப்படி, பலமுறை அவர் பந்தால் தாக்கப்பட்டு போட்டியில் இருந்து ஓய்வுபெற்றதால், அதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
அவருக்கு ஏற்பட்டிருக்கும் மூளையதிர்ச்சி நோய், அவரது மனதையும் பாதித்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது, அவரது கிரிக்கெட் பயணத்திற்கு இடையூறாக அமைந்துள்ளது.
இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்துவிட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதையடுத்து, அவரது கிரிக்கெட் வாழ்க்கை 26 வயதிலேயே முடிவுக்கு வந்துள்ளது.