விளையாட்டு

பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

webteam

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று டான்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி ரன்களை குவித்தனர். பின்ச் 82 ரன்கள் சேர்த்த நிலையில், டேவிட் வார்னர் தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருந்தது. ஆனால், பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் முகம்மது அமீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 53 ரன்களும், முகமது ஹசீப் 46 ரன்களும், சஃப்ரஸ் அகமது 40 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய வாகாப் ரியாஸ் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் குவித்தார். 

எனினும் பாகிஸ்தான் அணி 45 புள்ளி 4 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தட்டி சென்றார். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ள ஆஸ்திரேலியா அணி 3ல் வெற்றிப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிப் பெற்று 8 இடத்தில் இருக்கிறது.