அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 298 ரன் குவித்துள்ளது.
முதல் போட்டியைப் போல் இந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசினார். ஆஸ்திரேலியா அணி 26 ரன்னில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. கரே 18, பின்ச் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து கவாஜாவும் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்ஷ் நிதானமாக விளையாடி பந்துகளை வீணடிக்காமல் ரன்களைச் சேர்த்தார். ஹண்ட்ஸ்கோம் 20, ஸ்டோய்னிஸ் 29 ரன்னில் அவுட் ஆக மார்ஷ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். மார்ஸ் 108 பந்துகளில் சதம் அடித்தார். மேக்ஸ்வெல் 37 பந்தில் 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, சிறப்பாக விளையாடி சதம் அடித்த மார்ஸ் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் குவித்து 48வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மார்ஷ், மேக்ஸ்வெல் களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலிய அணி 320 ரன்கள் எடுக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்ததால் ரன் சேர்ப்பு இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடைசியில் லயன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்துள்ளார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 4 விக்கெட்களையும், முகமது சமி 3 விக்கெட்களையும் சாய்த்தனர். முதல் போட்டியில் களமிறங்கிய முகமது சிராஜ் 10 ஓவர் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 76 ரன் வாரி வழங்கினார். குல்தீப் யாதவும் விக்கெட் எடுக்காமல் 66 ரன் வழங்கினார்.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்க 288 ரன்களை எட்ட முடியாமல் இந்திய அணி 254 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒத்துழைத்தால் மட்டும் இந்தப் போட்டியில் எளிதில் வெல்ல முடியும்.